சிறு வயதில் அசாம் டீ விற்று வந்தேன்: அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

சிறு வயதில் அசாம் டீ விற்று வந்தேன்: அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
Updated on
2 min read

‘‘சிறு வயதில் நான் உங்கள் மாநிலத்தின் பிரபலமான அசாம் டீ விற்றேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாக பேசினார்.

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் (4, 11) 2 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டம் போர்குரியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு எதிராக போரிடப் போவதாக அசாம் முதல்வர் தருண் கோகோய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், அவருடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை.

அசாம் முதல்வரை மதிக்கி றேன். ஆனால், மாநிலத்தில் நிலவும் வறுமை, ஊழல் மற்றும் பேரழிவு ஆகியவற்றை எதிர்த்து நான் போரிடுகிறேன்.

நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களில் அசாமும் ஒன்றாக உள்ளது. ஒரு காலத்தில் வளமான மாநிலங் களில் ஒன்றாக இருந்த இந்த மாநிலம் ஏழை மாநிலமாக மாறியதற்கு யார் காரணம்?

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 1,000 கிராம மக்கள் இன்னமும் மின்சார வசதியின்றி தவிக்கின்றனர். இதற்கு யார் காரணம்.

நாங்கள் (பாஜக) இதுவரை இந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்ததில்லை. அப்படியானால் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஆட்சியில் இருந்தவர் கள்தான் (காங்கிரஸ்) காரணம்.

எனவே, இந்த முறை பாஜக வுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், இளைஞர் ஒருவர் (சர்பானந்த சோனோவால்) முதல்வராவார். அவர் 60 ஆண்டு களில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் செய்து முடிப்பார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு கல்வி, இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு மூத்த குடிமக்களுக்கு மருந்து தாராளமாகக் கிடைக்கும். வளர்ச்சி, வேகமான வளர்ச்சி, அனைத்து துறையிலும் வளர்ச்சி ஆகியவைதான் எங்களது 3 முக்கிய குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங் கிய மோடி, அம்மாநில மக்களின் மனதைத் தொடும் வகையில் பேசினார். குறிப்பாக தான் டீ விற்பனை செய்த இளமைக் காலத்தை மோடி நினைவுகூர்ந்தார். அவர் கூறும்போது, “சிறு வயதில் நான் உங்கள் மாநிலத்தின் பிரபலமான அசாம் டீ விற்றேன். இதன்மூலம் சிறு வயதிலிருந்தே இந்த மாநில மக்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது” என்றார்.

இதுதவிர, மஜுலி, பிபுருயா, பொகாகட் மற்றும் ஜோர்ஹட் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் ரங்கபாரா மற்றும் கரீம்கஞ்ச் ஆகிய 2 இடங்களில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 91 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் 24 இடங்களிலும் மீதம் உள்ள இடங்களில் போடோ மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in