

சாவர்க்கர் சிறையில் இருந்தார். அப்போது மகாத்மா காந்தி எங்கே இருந்தார், இருவரும் எப்படி சந்தித்து தொடர்பு கொண்டனர், பாஜகவினர் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நாத் சிங்குக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார், இது வரலாற்று உண்மை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் ராஜ்நாத் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சாவர்க்கர் சிறையில் இருந்தார். அப்போது மகாத்மா காந்தி எங்கே இருந்தார். அந்த நேரத்தில் சாவர்க்கரை, காந்தி எப்படி தொடர்பு கொண்டார். அவர்கள் இருவரும் எப்படி சந்தித்து தொடர்பு கொண்டனர். பாஜகவினர் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர்.
சாவர்க்கர் சிறையில் இருந்தபடியே பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனுவை அனுப்பினார். பிரிட்டிஷர் அரசுக்கு மனு அனுப்பி கருணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். 1925 இல் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் தான் முதன்முதலில் இரண்டு தேசக் கோட்பாட்டைப் பற்றி பேசினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.