

இந்தியா சிமென்ட்ஸ் காணிக்கையாக அளித்த ரூ.12 கோடி நிதியில்திருமலையில் கட்டப்பட்ட பூந்திதயாரிக்கும் நவீன மடப்பள்ளியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் உலக பிரசித்திபெற்றதாகும். இந்த லட்டு பிரசாதம்தயாரிக்க முதலில் பூந்தி தயாரிக்கப்படுகிறது. இதற்காக தனியாக மடப்பள்ளி உள்ளது. 2008-ம் ஆண்டு வரை தினமும் 45 ஆயிரம் லட்டுபிரசாதங்கள் தயாரிக்க தேவையான பூந்தி தயாரிக்கப்பட்டது.
பின்னர், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீநிவாசன்சார்பில் ரூ.10 கோடி செலவில் 40எல்பிஜி அடுப்புகள் அமைக்கப்பட்டு தினமும் 3.75 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டன. இதனை அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தொடங்கி வைத்தார்.
அதிக வெப்பத்தால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதால், அதிநவீன பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியை உருவாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டது. இதற்கான செலவு ரூ.12 கோடியை இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீநிவாசன் ஏற்றுக்கொண்டார். இவர், தற்போது மீண்டும்தேவஸ்தானத்தின் அறங்காவலராக பொறுப்பேற்றுள்ள நிலையில், திருமலையில் 8,541 சதுர அடியில் அதிநவீன பூந்தி மடப்பள்ளி நிறுவப்பட்டது.
புதிய மடப்பள்ளியில் தினமும் 6 லட்சம் லட்டு பிரசாதங்களை தயாரிக்க இயலும். இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீநிவாசன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்பிக்கள், அறங்காவலர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.