நிலக்கரி விநியோகம் போதிய அளவு உள்ளது: மின் தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

நிலக்கரி விநியோகம் போதிய அளவு உள்ளது: மின் தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

நாட்டின் சில மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்திபாதிக்கப்பட்டு மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு குறித்து அரசு உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் அளித்துள்ள மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நிலக்கரி விநியோகம் சீராக உள்ளதாகவும் நேற்று முன்தினம் மிகவும்அதிகபட்ச அளவாக 11 லட்சம் டன்நிலக்கரி விநியோகிக்கப்பட்டதாக வும் குறிப்பிட்டார். நிலக்கரி விநியோக நிலை சீரடைந்து வருவதாகவும், இது அடுத்து வரும் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 21-ம் தேதிக்குப் பிறகு தினசரி 20 லட்சம் டன் நிலக்கரி விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய பிறகு நேற்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த விவரங்களை அவர்அளித்தார். அனல் மின் நிலையங்களின் தேவைக்கேற்ப நிலக்கரி விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு என்றும் அவர் கூறினார்.

பிரதமர் அலுவலக அதிகாரிகள் 6 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பிஹார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதனிடையே இந்திய எரிவாயு ஆணைய நிறுவன (கெயில்) அதிகாரிகள் தவறான தகவலை பரப்பியதால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற செய்திவெளியாகியுள்ளது. தேவையற்ற பிரச்சினையை சில அதிகாரிகள் பரப்பியதால் தவறான அபிப்ராயம் மின் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in