

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர். சோபியான் மாவட்டத்தில் துல்ரன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தமூன்று பேரும் சமீபத்தில் அப்பாவி மக்கள் கொலை செய்த தீவிரவாத இயக்கமான எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.
இதனிடையே, சோபியானில் பெரிபோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீதுபாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவங்களையும் சேர்த்து கடந்த இரண்டு நாட்களில் 5 இடங்களில் நடந்த என்கவுன்ட்டர்களில் 7 தீவிரவாதிகள், 5 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர்கொல்லப்பட்டுள்ளனர். - பிடிஐ