

தீவிரவாதத்துக்கு எதிராகவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
கஜகஸ்தான் தலைநகர் நுர் சுல்தானில் நேற்று ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கை அமைப்பின் (சிஐசிஏ-சைகா) 6-வது கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:
உலக நாடுகளில் அமைதி தவழ வேண்டும். நாடுகள் செழிப்படைய வேண்டும் என்பதே இந்தியாவின் ஆசை. ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை சர்வதேச நாடுகள் அளிக்க வேண்டும்.
அமைதியும் வளர்ச்சியும் நமது பொதுவான குறிக்கோள் என்றால், நாம் கடக்க வேண்டிய மிகப்பெரிய எதிரி தீவிரவாதம் ஆகும். எல்லை தாண்டிய தீவிரவாதம் என்பது தீவிரவாதத்தின் மற்றொரு வடிவம்என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சர்வதேச தீவிரவாதம் என்ற அரக்கனுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
பருவநிலை மாற்றம், கரோனாபெருந்தொற்றுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்தது போல, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை இந்த உலகிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
ஆப்கன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு சைகா அமைப்பு ஒரு நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.- பிடிஐ