பெங்களூருவில் தொடர் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய விமான நிலையம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி, துங்கப்பத்ரா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஜெயநகர், மல்லேஸ்வரம், சிவாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் விழுந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிருஷ்ணராஜபுரம், ஹென்னூர், எலஹங்கா ஆகிய தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களும், சுவர்களும் இடிந்து விழுந்தன. இதனால் 8 பேர் காயமடைந்த நிலையில், 6 ஆடுகள் பலியாகின.
இந்நிலையில், கனமழையால் பெங்களூரு சர்வதேச விமான நிலைய சாலையில் மழை நீர் வெள்ளமாக கரைபுரண்டோடியது. இதனால் வாடகை கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே விமானப் பயணிகளும், ஊழியர்களும் சரக்கு டிராக்டர் மற்றும் லாரிகளில் ஏறி விமான நிலையத்தை சென்றடையும் நிலை ஏற்பட்டது.விமான நிலையத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
