

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின்போது, அதிமுக தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் பேசும்போது, “தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்றத் தில் நிலுவையிலுள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெறவும், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்துகிறோம்” என்றார்.
இதுதொடர்பாக பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “உறுப்பினர்களின் எண்ணங் கள், கோரிக்கைகள் தொடர்புடைய அமைச்சரிடம் உரிய நடவடிக்கைக் காக தெரிவிக்கப்படும்” என்றார்.
முன்னதாக இப்பிரச்சினையை எழுப்பும் முன் அதிமுக உறுப்பினர் கள் அவையின் மையத்துக்கு வந்து அமளியில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய மாநிலங்களவை அவைத் தலைவர், அதுதொடர்பாக பேசுவதற்கு நேரம் கொடுத்தார்.
மக்களவையில் இதுதொடர்பாகப் பேசிய அதிமுக எம்.பி. பி. குமார் “மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது, மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடுவதாகும்” என்றார். அவருக்கு ஆதரவாக மற்ற அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.