

மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பின் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த 3 நகரங்களிலும் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடப் பயன்படும் ஆர் மதிப்பு (R-value) அளவு அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஐஎம்எஸ் நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.
ஆர்-வேல்யு என்பது கரோனா வைரஸ் பரவும் வேகத்தை அதாவது, தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து புதிதாக எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதைக் குறிக்கும். அந்த வகையில் ஆர்-வேல்யு எண் ஒன்றுக்கு (1) குறைவாக இருந்தால், கரோனா பரவல் வேகம் குறைவு, அதேசமயம், எண் ஒன்றுக்கு அதிகமாக இருந்தால், கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது எனக் கணக்கிடப்படுகிறது. ஒன்றுக்கு மேல் எண்ணிக்கை தசம ஸ்தானத்தில் அதிகரித்தாலும் பரவல் வேகம் அதிகரிக்கும்.
மும்பையைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 10 முதல் 13 வரை 0.70 ஆக ஆர் வேல்யு இருந்தது. அதன்பின் 13-ம் தேதி முதல் 17 வரை 0.95 ஆகவும், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை 1.09 ஆகவும் ஆர் மதிப்பு இருந்தது. பின்னர் செப்டம்பர் 25 முதல் 27 வரை 0.95 ஆகக் குறைந்தது. மும்பையில் கரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதால், ஆர்-மதிப்பு செப்டம்பர் 28 முதல் 30 வரை 1.03 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
தற்போது நவராத்திரி, தீபாவளிப் பண்டிகைகளில் மற்றும் கோயில்களைத் திறக்க மகாராஷ்டிர அரசு அனுமதி போன்றவற்றால் இனிவரும் நாட்களில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6-ம் தேதி மும்பையில் மட்டும் 629 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இது கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் இந்த அளவு பாதிப்பு அதிகரித்தது இதுதான் முதல் முறையாகும்.
பெங்களூரு, கொல்கத்தாவில் கடந்த ஒரு மாதமாகவே ஆர்-மதிப்பு எண் ஒன்றுக்கு மேல் இருந்து வருகிறது. கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒன்றுக்கு அதிகமாகவும், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை 1.06 வரையும் உயர்ந்தது.
பெங்களூரு நகரில் கடந்த ஒரு மாதமாக ஆர்-மதிப்பு ஏறக்குறைய ஒன்று அளவிலும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 1.05 ஆகவும் அதிகரித்தது. டெல்லி, சென்னை, புனே ஆகிய நகரங்களில் ஆர்-மதிப்பு ஒன்றுக்குக் கீழ்தான் இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ஆய்வாளர் சீதாபிரா சின்ஹா கூறுகையில், “சென்னை, டெல்லி, புனே நகரங்களில் ஆர் மதிப்பு ஒன்றுக்கும் குறைவாக இருப்பதால், கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஆனால், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் ஆர்-மதிப்பு ஒன்றுக்கு அதிகமாகவும், ஒன்றாக இருப்பதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளதைக் குறிக்கிறது. டெல்லியில் கடந்த செப்டம்பர் 27 முதல் 30வரை ஆர் மதிப்பு ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், பின்னர் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.