2 வயது முதல் 18 வரையிலான பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: மத்திய அரசுக்கு வல்லுநர்கள் பரிந்துரை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதின்வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசியைப் பரிந்துரை செய்வது குறித்து வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து, இறுதி முடிவை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எடுக்கும். ஒருவேளை அனுமதியளிக்கப்பட்டால், குழந்தைகளுக்கான 2-வது தடுப்பூசி புழக்கத்துக்கு வரும்.

இதற்கு முன் ஆகஸ்ட் மாதத்தில் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 டோஸ்கள் கொண்ட ஜைகோவ்-டி மருந்துக்கு அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சீரம் நிறுவனம் தயாரித்துவரும் நோவாவேக்ஸ் மருந்தை 7 வயது முதல் 11 வயதுள்ள பிரிவினருக்கு பரிசோதித்துப் பார்க்க அந்த நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

2 வயது முதல் 18 வயதுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டதற்கான ஆதராங்கள், புள்ளிவிவரங்கள், அறிக்கைகளை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியது. இதுவரை இந்தியாவில் 96 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியர் சஞ்சய் கே ராய் கூறுகையில், “3 வகையான வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மருந்து பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. முதல் பிரிவு 12 முதல் 18 வயது, 2-வது பிரிவு 6-12 வயது, 3-வது பிரிவு 2-6 வயதுள்ளவர்களுக்குப் பரிசோதிக்ககப்பட்டது. இந்தப் பரிசோதனையில் மருந்து பாதுகாப்பானது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பது கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in