

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், உணவகங் களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எழுந்த புகாரையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தேஷ்முக்கிற்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள அனில் தேஷ்முக்கின் வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். எதற்காக சோதனை நடக்கிறது என்ற தகவலை சிபிஐ வெளியிடவில்லை. சிபிஐயின் ஆரம்பகட்ட விசாரணையின் ஒரு பகுதி சமீபத்தில் கசிந்தது. இது தொடர்பாக தேஷ்முக்கின் வழக்கறிஞர் மற்றும் சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ