Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5-ம் நாள் பிரம்மோற்சவ விழா; கருட வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்பர்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை தலைமேல் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கினார். உடன் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி.

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் இம்முறை ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 5-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில், கருட சேவை நிகழ்ச்சி நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. கருட வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதிக்கு நேற்றுவந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரூ. 25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அலிபிரி மலை வழிப் பாதையை தொடங்கி வைத்து, அங்கிருந்து திருமலைக்கு கார் மூலமாக சென்றடைந்தார்.

அங்கு முதல்வரை தேவஸ்தான அதிகாரிகள், அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், பேடிஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்தபடி, ஏழுமலையான் கோயிலுக்குள் சென்று, அவற்றை அதிகாரிகளிடம் வழங்கினார். அதன் பின்னர், அவர் வரும் 2022-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிக்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து கருட வாகன சேவையில் பங்கேற்றார். நிறைவில் ஜெகன்மோகனுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

திருப்பதி வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,திருமலை திருப்பதி தேவஸ்தான எலும்பு சிகிச்சை பிரிவு (பர்டு) மருத்துவமனையில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இதய நோய் சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி இலவச மருத்துவமனையையும் திறந்து வைத்தார்.

மேலும், அலிபிரி மலை அடிவாரத்தில் ரூ.15 கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினரும், தமிழக திருப்பதி தேவஸ்தான கோயில்களின் தலைவருமான சேகர் ரெட்டி வழங்கிய நிதியில் மிகவும் பிரம்மாண்டமாக கோ மந்திரம் கட்டப்பட்டுள்ளது.

கலை நயத்துடன் கட்டப்பட்ட இந்த பசுக்களின் கோயிலில், நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்கள் கோ பூஜை செய்யவும், கோ துலாபாரம் செய்யவும் அனுமதிக்கப்படுவர். இதனை நேற்று மாலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலில் கோ பிரதட்சனை செய்த பின்னர் திறந்து வைத்தார்.

மோகினி அலங்காரம்

முன்னதாக, நேற்று காலை கோயில் வளாகத்திற்குள் மலையப்பர் மோகினி அவதாரத்தில் தங்க ஊஞ்சலில் ஒய்யாரமாக எழுந்தருளினார். அவருடன் ஸ்ரீ கிருஷ்ணரும் எழுந்தருளினார். இருவரும் வெவ்வேறு பல்லக்கில் அருள் பாலித்தனர்.

திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தேவஸ்தான ஜீயர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x