

காவிரி ஒழுங்காற்று குழுவின் 53-வது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் பொதுப் பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் ராம மூர்த்தி உள்ளிட்டோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதி நிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், “காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்குவதில்லை. கடந்த செப்டம் பர் வரை வழங்க வேண்டிய நீரில் 25.84 டிஎம்சி நீரை இன்னும் வழங்கவில்லை. அக்டோபரில் வழங்க வேண்டிய 20 டிஎம்சி நீரில் 6.54 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது.எனவே செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும், அக்டோபரில் வழங்க வேண்டிய நீரில் மீதியுள்ள 14.46 டிஎம்சி நீரையும் உடனடியாக திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசு மொத்தமாக 40 டிஎம்சி நீர் வழங்கினால் மட்டுமே தமிழ்நாட்டு விவசாயிகளின் பாசன வசதிக்காக நீரை திறந்துவிட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார், “தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் மற்றும் அக்டோபரில் வழங்க வேண்டிய நீரையும் சேர்த்து மொத்தமாக 40 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட இந்த முடிவு, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.