Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

திருப்பதி மலை அடிவாரமான அலிபிரியில் ரூ.15 கோடியில் ‘கோ மந்திரம்’ பசுக்கள் கோயில் திறப்பு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார்

திருப்பதி மலை அடிவாரமான அலிபிரியில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பசுக்களுக்கான பிரத்யேக கோயிலான‘கோ மந்திரம்’ வளாகத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ஏ.ஜே.சேகர் வரவேற்றார். அறங்காலவர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பசுக்களுக்கான பிரத்யேக கோயிலான ‘கோ மந்திரம்’ கோயில் வளாகத்தை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் அருள்புரியும் திருமலை திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் ‘கோ மந்திரம்’ என்ற பெயரில் பசுக்களுக்கான பிரத்யேக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் தியானக் கூடம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் இந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக ஆலோசனைக் குழு தலைவரும், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினருமான ஏ.ஜே.சேகர் தனது உபயமாக இக்கோயிலை கட்டித் தந்துள்ளார். கோயிலுக்கான பராமரிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இக்கோயில் குறித்து அவர் கூறியதாவது:

பசுவை தெய்வமாக கருதி, நம் முன்னோர் வழிபட்டு வந்துள்ளனர். ஏழுமலைகளின் அடையாளமாக இங்கு 7 பசுக்கள் பூஜிக்கப்படும். அவற்றை வலம்வந்து வழிபடுவதுடன், பசுவின் எடைக்கு எடை அரிசி, கோதுமை, வெல்லம், தானியங்களை துலாபாரம் வழங்கியும் பக்தர்கள் அருள்பெறலாம். இதற்காக, கோயிலில் பிரம்மாண்ட தராசு வைக்கப்பட்டுள்ளது.

இது வனப்பகுதி என்பதால், வன விலங்குகளால் பசுக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பான வேலி அமைக்கப்படும். இதன் அருகே மேலும் 30 பசுக்களை பராமரிக்கும் கோசாலையும் விரைவில் அமைய உள்ளது.

கோ மந்திரம் கோயிலை கட்டித்தர வாய்ப்பு தந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காலவர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x