படைகளை வாபஸ் பெற மறுப்பு; இந்தியா - சீனா பேச்சுவார்த்தை தோல்வி

படைகளை வாபஸ் பெற மறுப்பு; இந்தியா - சீனா பேச்சுவார்த்தை தோல்வி
Updated on
1 min read

எல்லையில் படைகளை வாபஸ் பெற மறுத்ததால் இந்தியா- சீனா இடையேயான 13-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்களின் 13வது கூட்டம், சுசூல் - மோல்டோ எல்லையில் கடந்த 10ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டை சீன தரப்பினர் தன்னிச்சையாக மாற்ற முயன்றதாலும், இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சினை எழுந்ததாக இந்திய தரப்பினர் சுட்டிக் காட்டினர்.

ஆகையால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் மேற்குப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த சீன ராணுவத்தினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். துஷான்பே நகரில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் எல்லையில் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒப்புக் கொண்டனர்.

அவர்களின் வழிகாட்டுதலின் படி பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படும் என இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இந்தியத் தரப்பு வழங்கியது. ஆனால் இதற்கு சீனத் தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களால் முன்னோக்குத் திட்டங்களை வழங்க முடியவில்லை. அதனால் இந்தக் கூட்டத்தில் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படவில்லை.

தகவல் பரிமாற்றம், நிலைத்தன்மை ஆகியவற்றை பராமரிக்க இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஒட்டுமொத்த இருதரப்பு உறவைக் கருத்தில் கொண்டு, பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண, இருதரப்பு ஒப்பந்த நெறிமுறைகள் படி சீனா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in