நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார தட்டுப்பாடு?- அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார தட்டுப்பாடு?- அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை
Updated on
1 min read

நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் மின் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்தததால் இருப்பில் இருந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகஅளவு சென்று விட்டது. இது தவிர சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமானதால் விலையை தாறுமாறாக உயர்த்தின. இதனால் வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டிலும் நிலக்கரி இல்லாமலும் இந்தியா சிக்கி தவிக்கிறது.

கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

நிலக்கரி போதுமான அளவு இல்லாததால் நாட்டின் பல பகுதிகளில் மின் பற்றாக்குறை ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலக்கரி மற்றும் மின் அமைச்சகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது மூன்று அமைச்சர்களும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பது மற்றும் தற்போதைய மின் தேவைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு நடத்தும் என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in