

பிரதமரின் ட்விட்டர் கணக்கு, கவனத்துடன் உருவாக்கப்பட்ட ட்வீட்டுகள் மற்றும் திட்டமிடப்பட்ட பின்தொடர்பு பதில்கள் உள்ளிட்டவற்றால் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மோடி எனும் 'பிராண்ட்' உருவாவதற்கு ட்விட்டர் உறுதுணை புரிந்துள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில், பிரதமர் நரேந்திர மோடியின் இணைய பிம்பம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த ஆய்வு வெளிவந்துள்ளது.
அதில், சமூக ஊடகங்களில் முக்கியமாக ட்விட்டரில் அவரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்த தகவல்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக >@narendramodi என்ற பெயரில் இருக்கும் அவரின் ட்விட்டர் கணக்கு ஆராயப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் ஆய்வாளர்கள், 'பிரதமரின் ட்விட்டர் கணக்கு, கவனத்துடன் உருவாக்கப்பட்ட ட்வீட்டுகள் மற்றும் திட்டமிடப்பட்ட பின்தொடர்பு பதில்கள் உள்ளிட்டவைகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பிம்பம் மோடிக்கு வலுவானதொரு இணைய பிம்பத்தை உருவாக்க உதவியிருக்கிறது' என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.
பொதுத்தேர்தலுக்கு முன்பு வரை, மோடி எந்த ட்விட்டர் கணக்குகளையெல்லாம் பின்தொடர்ந்தார்?
மே 2014 வரை, மோடி 1043 ட்விட்டர் கணக்குகளை பின்தொடர்ந்திருக்கிறார். அவர்களின் அக்கவுண்டுகளை வைத்து பார்க்கும்போது, அனைவருமே வெவ்வேறு பின்புலங்களைச் சேர்ந்தவர்கள். எந்தவொரு குறிப்பிட்ட துறை வல்லுநர்களாகவும் இல்லாத சாதாரண மனிதர்கள். அத்தகைய மனிதர்களின் பொதுவான குறிப்புகளாக 'பெருமை', 'தேசியவாதம்', 'இந்து', 'நாட்டுப்பற்று' உள்ளிட்டவை காணப்பட்டன. அவர்களைத்தவிர பாஜக அரசியல்வாதிகள் மற்றும் சில பிரபலங்களையும் மோடி பின்தொடர்ந்தார்.
பொதுவாக பெரும்பாலான அரசியல்வாதிகள், பிரபலங்களையும், செய்தி ஊடகங்களை மட்டுமே பின்தொடர்வார்கள். மோடி இதிலிருந்து விதிவிலக்காக இருந்தார்.
இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய பாஜக தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அரவிந்த் குப்தா கூறும்போது, "பிரதமர் சமூக ஊடகங்களை ஒரு வழி ஊடகமாகக் கருதவில்லை. அதைப் பார்க்கவும், கேட்கவும், பதிலளிக்கவும் செய்கிறார். சமூக ஊடகங்களைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் இளைஞர்களின் மனநிலையோடு ஒன்றவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் இவற்றைப் பயன்படுத்துகிறார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே" என்கிறார்.
காலத்துக்கு ஏற்றது போல் மாறிய கணக்கு
பிப்ரவரி 2009 முதல் பிப்ரவரி 2015 வரையிலான மோடியின் ட்வீட்கள் இதற்காக ஆராயப்பட்டன. காலத்துக்கு ஏற்றதுபோல அவை மாறியிருந்தன. எல்லா காலகட்டங்களிலும் இளைய தலைமுறை மற்றும் வளர்ச்சி ஆகியவை முக்கியக் கருப்பொருளாக இருந்தன. முதல் இரண்டு கட்டத்திலும், இந்துத்துவக் கருத்துக்களான இந்து நம்பிக்கைகள், பண்டிகைகள், கடவுளர்கள், நடைமுறைகள் ஆகியவை அதிகமாக இருந்தன. ஆனால் 2014 பொதுத்தேர்தலை ஒட்டிய கட்டத்தில் அவை குறைய ஆரம்பித்தன.
அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளில், முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, குஜராத் என்ற வார்த்தை வேகமாகக் குறைந்தது. அது மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கான மாற்றமாக கருதப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் தேர்தல் பேரணிகள் மற்றும் அரசியல் மோதல்களுக்கான ட்வீட்டுகள் அதிகமாக இருந்தன.
ரீ-ட்வீட்டுகள்... ஃபேவரிட்கள்
2009 மற்றும் 2015-க்கு இடையில், மோடியின் ட்வீட்டுகளுக்கான ரீ- ட்வீட்டுகள் மற்றும் ஃபேவரிட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. 'தி இந்து'விடம் பேசிய ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜோயோஜீத் பால் கூறும்போது, "ரீட்வீட் என்பது உங்களின் ஃபாலோயர்கள், தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களால், உங்களின் கருத்தை பிரச்சாரம் செய்யும் முயற்சி" என்றார்.
ரீட்வீட்டுகளின் முக்கியத்துவம் பற்றி, ராகுல் காந்தி மற்றும் சசி தரூர் ஆகியோரின் அக்கவுண்டுகளை ஒப்பிட்டுக் கூறிய பேராசிரியர் பால், ''சசி தரூரின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ராகுல் காந்தியின் ஃபாலோயர்களைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் ரீட்வீட்டுகளின் எண்ணிக்கை ராகுலுக்கே அதிகமாக இருக்கிறது.
கவனமாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் வசப்படுத்தும் விதமான ராகுல் மற்றும் மோடியின் செய்தி ட்வீட்டுகள், சசி தரூரின் சாதாரண குடிமகனின் பாணியைக் காட்டிலும் அதிகமான பேருக்குச் சென்றடைகின்றன'' என்றும் கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய குப்தா, ''சமூக ஊடகங்களின் வருகையை முன்னதாகவே ஏற்றுக்கொண்டவர்களில் பிரதமரும் ஒருவர். அவரின் சொந்த அனுபவங்களின் மூலம், அதன் முழுமையாக சக்தியை தெளிவாக உணர்ந்திருக்கிறார். கவனமாகத் தயாரிக்கப்பட்ட உரைகளின் மூலம், பிரதமர் பொதுமக்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார். தன்னுடைய வேலைப்பளுவிலும், ட்விட்டர் கணக்கைத் தன் குழுவுடன் இணைந்து கவனிக்கிறார்'' என்றார்.
தமிழில்:ரமணி பிரபா தேவி