

லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிறன்று நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்ளி்ட்ட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா 11 மணிநேர விசாரணைக்குப்பின் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையேமோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் முதல் சம்மன் அனுப்பினர்.
ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி போலீஸார் விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி நேற்று முன்தினம் 2-வது சம்மனை போலீஸார் ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டினர்.
மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு சொந்த கிராமத்துக்குச் சென்றதால் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேற்று போலீஸார் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் போலீஸ் டிஐஜி உபேந்திர அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார்.
ஏறக்குறைய 11 மணிநேரம் லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், போலீஸார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆஷிஸ் மிஸ்ராவை போலீஸார் நேற்று இரவு 11 மணி அளவில் கைது செய்தனர். அவரை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு எடுக்க போலீஸார் கோரினர்.
ஆனால், திங்கள்கிழமை வரை ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
போலீஸ் டிஐஜி உபேந்திர அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில் “ லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினோம் ஆனால், அவர் எதற்கும் ஒத்துழைப்பு தரவில்லை. ஆதலால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குக் கோரினோம், ஆனால், திங்கள்கிழமைவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்கு வருவதையடுத்து, லக்கிம்பூர் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விசாரணைக் குழு ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தும்போது மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா லக்கிம்பூர் நகரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஆஷிஸ்மிஸ்ரா அப்பாவி, நிரபராதி என அமைச்சரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கில் உ.பி. அரசும், போலீஸாரும் எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படிநடவடிக்கை எடுங்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் கடமையைச் செய்யும்” என எச்சரித்திருந்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதையடுத்து, தான் கடைபிடித்து வந்த மவுன விரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவி்த்தார்.