

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் அக்டோபர் 2-ல் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளன. இதில் 5-ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் ரூ.20,000 கோடி அளவில் விற்பனை செய்துள்ளதாக ரெட்சீர் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மீதமுள்ள ஐந்து நாட்களில் ரூ.15,750 கோடி அளவில் விற்பனை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரெட்சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பண்டிகைக்கால விற்பனையில் மொத்தமாக ரூ.36,000 கோடி அளவில் (4.8 பில்லியன் டாலர்) விற்பனை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு பண்டிகைக்கால விற்பனை 7 நாட்கள் நடைபெற்றது. இவ்வருடம் 9 நாட்கள் நடைபெறுகிறது. சென்ற ஆண்டு முதல் நான்கு நாட்களில் 67% அளவில் விற்பனை நடைபெற்றது. தற்போதைய மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு முதல் நான்கு நாட்களில் 57% அளவில் விற்பனை நடைபெற்றிருக்கிறது. மொத்த விற்பனையில் ஸ்மார்ட் போன்கள் 50% அளவில் பங்கு வகிக்கிறது. இந்த முறை டயர் 3 நகரங்களிலும் அதிக அளவு விற்பனை நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்களில் அதிக அளவு தள்ளுபடி வழங்கப்படுவதால், மொபைல் போன்கள், ஆடைகள், டிவி மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை ஆன்லைனில் வாங்குவது மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில், இவ்வாண்டு ஆன்லைன் வழியிலான விற்பனை சென்ற ஆண்டைவிட 37% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.