

இக்கட்டான தருணங்களில் இந்தியாவுக்குத் துணை நின்ற ரஷ்யா, நம்பிக்கைக்குரிய நண்பன் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரஷ்ய துணைப்பிரதமர் திமித்ரி ரோகோஸின் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் வாழ்த்துகளை ரோகோஸின் தெரிவித்தார். மேலும், மோடியுடன் இணைந்து செயல்படவும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிறப்புவாய்ந்த உத்திப்பூர்வமான நட்புறவை வலுப்படுத்தவும் புதின் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ரோகோஸினிடம் மோடி பேசுகையில், “இந்த ஆண்டு இறுதியில் புதினுடன் ஆக்கப் பூர்வமான நிலைத்த, தொலைநோக்குடைய சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதாக” தெரிவித்தார்.
மேலும், “இக்கட்டான தருணங்களில் இந்தியாவுக்குத் துணை நின்ற ரஷ்யா, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பன். இந்தியாவின் ராணுவ பலத்தை கட்டமைத்ததில் ரஷ்யா பெரும்பங்கு வகித்தது. அதனால், ரஷ்யா மீது இந்தியா நல்லெண்ணம் கொண்டுள்ளது. ரஷ்யாவுடனான உறவை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி ரோகோஸினிடம் தெரிவித்தார்.
ரஷ்ய போர்க்கப்பலான அட்மிரல் கேர்ஸ்கோவ் புதுப்பிக்கப்பட்டு, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை கடந்த 14-ம் தேதி பார்வையிட்ட நரேந்திர மோடி, அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த மோடி, இந்திய கடற்படையில் முக்கிய மைல்கல்லான இந்நிகழ்ச்சிக்கு ரஷ்யா பங்களித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.