

கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், காதலியின் பெற்றோர் மற்றும் இந்துத்துவ அமைப்பின் நிர்வாகி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஆஸம் நகரைச் சேர்ந்தவர் அர்பாஸ் முல்லா (25). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 27-ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. அவரது தாய் நஜீமா முகமது, ஆஸம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி பெலகாவியை அடுத்துள்ள கானாப்புரா அருகே ரயில்வே தண்டவாளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில், தலை துண்டிக்கப்பட்டு அர்பாஸ் முல்லா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து அவரது தாய் நஜீமா முகமது பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில், ‘‘தன்னுடன் பணியாற்றும் இந்து பெண்ணை காதலித்ததால் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் பெற்றோரும் இந்துத்துவ அமைப்பினரும் காதலை கைவிடுமாறு மகனை மிரட்டினர். இதனால் நாங்கள் வீட்டை காலி செய்துவிட்டு, வேறு பகுதிக்கு சென்றுவிட்டோம். எனினும் என் மகன் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசியதாலேயே திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அப்பகுதி ஸ்ரீராம் சேனா நிர்வாகி மகாராஜா புன்டலிகாவுக்கு அர்பாஸ் முல்லாவை கொலை செய்ய பெண்ணின் தந்தை ஈரப்பா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு குத்புதின் அல்லாபாஷா என்பவர் மூலம் அர்பாஸ் முல்லாவை மகாராஜா புன்டலிகா சம்பவ இடத்துக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஈரப்பா (51), தாய் சுசீலா (47), மகாராஜா புன்டலிகா (39), கூலிப்படையை சேர்ந்த குத்புதீன் அல்லாபாஷா (36), மாருதி பிரஹ்லாத் (30), மஞ்சுநாத் துக்காராம் (25), கணபதி ஞானேஸ்வரா (26), பிரசாந்த் காலப்பா (28), பிரவீன் சங்கர் (28) மற்றும் ஸ்ரீதர் மகாதேவா (26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.