

கடந்த 2013-ல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு விளம்பர தூதராக நடிகை ரம்யா இருந்தார். அப்போது கன்னட தனியார் சேனல், 'பெட்டிங் ராணிகள்''என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பியது. அதில் ரம்யா மேட்ச் பிக்சிங், சூதாட்டங்களில் ஈடுபடுவதாக காட்டியது. இதை எதிர்த்து ரம்யா கடந்த 2013, மே மாதம் பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ரம்யாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரம்யா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிபதி ஜி.டி. மாஹவர்கர், “பொதுவாழ்வில் இருக்கும் ரம்யா மீது அவதூறு செய்தி வெளியிட்டதற்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த செய்தியை ஒளிபரப்பிய தனியார் சேனல் உரிமையாளர், ஊழியர்கள் மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையடுத்து பெங்களூரு போலீஸார் சம்பந்தப்பட்ட கன்னட தனியார் சேனல் உரிமையாளர், ஒளிப்பரப்பிய ஊழியர்கள் என 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.