

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணும், அவரின் கணவரும் சேர்ந்து கட்டிய கரோனா மாதா கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தீப்மாலா ஸ்ரீவஸ்தவா என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “பிராதாப்கார்க் மாவட்டத்தில் உள்ள ஜூஹிசுக்லாப்பூர் கிராமத்தில் கரோனா மாதா கோயில் கட்டப்பட்டது. கடந்த ஜூன் 7-ம் தேதி கட்டப்பட்ட இந்தக் கோயிலை ஜூன் 11-ம் தேதி இரவு சிலர் இடித்தனர். இந்தக் கோயிலை போலீஸார் இடித்துவிட்டதாக கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இதை மறுத்த போலீஸார், இந்தக் கோயில் இரு பிரிவினருக்கு இடையிலான சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
இந்தக் கோயிலை லோகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா உள்ளூர் மக்களின் உதவியுடன், நன்கொடை பெற்றுக் கட்டினார். இந்தக் கோயிலில் கரோனா மாதா சிலையும் நிறுவப்பட்டு, இந்தக் கோயிலுக்கு அர்ச்சகரையும் நியமித்துள்ளனர். இந்தக் கோயில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டது என்றும், கோயில் கட்டப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டதாகவும் நிலத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த நாகேஷ்குமார் ஸ்ரீவஸ்தவா என்பவர் போலீஸில் புகார் செய்துள்ளார். ஆதலால், கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், என்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, “இந்தக் கோயில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நிலத்தில் உள்ளூர் விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. கோயில் இடிக்கப்பட்டதாகக் கோயில் கட்டிய பெண் எந்த நிவாரணமும் கோரவில்லை. ஆதலால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். இந்த அபராதத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தது.