

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா தெனியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா போலீஸார் விசாரணைக்கு இன்று காலை ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லக்கிம்பூர்கெரியில் உள்ள தனது வீட்டுக்கு மத்திய அமைச்சர் தெனி நேற்று சென்றுள்ளார் என்பதால், இன்று போலீஸார் விசாரணைக்கு தனது மகனை அனுப்பி வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையேமோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் நேற்றுமுன்தினம் சம்மன் அனுப்பினர். ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி நேற்று போலீஸார் விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை.
இந்நிலையில் தனது தந்தைமத்திய அமைச்சர் இல்லத்துக்கு வந்துவிட்டதால், அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று போலீஸார் விசாரணைக்கு ஆஜராவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே உ.பி. போலீஸார் தரப்பில், விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் நேற்று 2-வது முறையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கிடையே ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆஷிஸ் மிஸ்ரா குறித்த உண்மையான தகவல்களை உ.பி. போலீஸார்கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
ஆதலால், போலீஸார் விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராவாரா என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “ இந்த வழக்கில் உ.பி. அரசும், போலீஸாரும் எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படிநடவடிக்கை எடுங்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் கடமையைச் செய்யும்” என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.