

ஆந்திர மாநில விஜயவாடாவில் நேற்று முன் தினம் இரவு ‘இந்திர கீலாத்ரி’ என்றழைக்கப்படும் கனக துர்கையம்மன் கோயிலிலும் தசரா பண்டிகை தொடக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் துர்கையம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலில் நேற்றுமாலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 வரிசைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனிடையே, கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், விஐபிக்கள் வருகை, ஏற்பாடுகளை விவரிக்க தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே ராட்சத தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோயிலுக்கு சென்று வந்த பக்தர்களும், வெளியில் காத்திருப்போரும் தொலைக்காட்சி வழியாக அம்மனை தரிசித்து வந்தனர். அப்போது திடீரென எந்தவித சம்பந்தமும் இல்லாமல், வேற்று மத பிரச்சாரம் ஒளிபரப்பப்பட்டது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை வேற்று மத பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மன் வழிபாட்டை நேரடியாக ஒளிபரப்பினர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.