

ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை 10-ம் தேதி, சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து சிபிஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில், ‘‘தேரா சச்சா அமைப்பில் பெண் சிஷ்யைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் கடிதம் மூலம் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார்.அதனால் ரஞ்சித்தை கொல்ல குர்மீத் திட்டமிட்டுள்ளார்’’ என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஹரியாணாவின் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குர்மீத் ராம் ரஹிம் சிங், கிருஷண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகியோர் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று காலை தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றொரு நபர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டார்.
இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரம் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித் துள்ளது. - பிடிஐ