

நாட்டின் சில பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு 5 லட்சம் பண்ணைக் குட்டைகளை அமைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் ‘மனதிலிருந்து பேசுகிறேன்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசினார்.
அப்போது, விவசாயிகள் ரசாயன உரங்களை அதிக அளவு பயன்படுத்தாமல், ‘பார்மர்ஸ் ஆப்’ போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த இது மிகப் பெரும் வாய்ப்பு. நாட்டில் கால்பந்து தொடர்பாக அதிகபட்ச விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தனது 30 நிமிட உரையில், ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கோடை விடுமுறையில் மாணவர்கள் வெவ்வேறு விதமான திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் சர்க்கரை நோயை வெற்றி கொள்வதுடன், காசநோயை இந்தியாவில் இருந்து அழிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வேளாண்துறையைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பல பகுதிகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. சிறிய அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்கி, நீரைப் பாதுகாக்க வேண்டும். அரசு தனது பங்காக 5 லட்சம் பண்ணைக் குட்டைகளை அமைத்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்சேமிப்புக்கு போதிய முயற்சி எடுக்கப்படுகிறது. நீரைச் சேமிப்பதன் அவசியத்தை உணர்ந்து அதனை இயக்கமாக செயல்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.