

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.3 சதவீதத்தை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க ஊக்கச் சலுகை உள்ளிட்ட காரணங்களால் இத்தகையவளர்ச்சி சாத்தியமாகும் என்றுஉலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இது 7.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி 9.5 சதவீதத்தை எட்டும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார ஸ்திரமற்ற சூழல் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை இருக்கலாம் என உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.- பிடிஐ