Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

20 ஆண்டுகளுக்கு முன் முதல்வராக பதவியேற்ற போது பிரதமராவேன் என்று நினைக்கவே இல்லை: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி

‘‘கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வரா கப் பதவியேற்ற போது, நாட்டின் பிரதமராவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை’’ என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, குஜராத்தின் புதிய முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பதவி வகித்தார் மோடி. அதன்பின், கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில், பொது வாழ்க்கைக்கு பிரதமர் மோடி வந்து 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்தார்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கான சேவை செய்து, மக்களில் ஒருவனாக வாழ்ந்து வந்தேன். ஆனால், கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இதே நாளில் எனக்கு புதிய பொறுப்பு கிடைத்தது. குஜராத்தின் முதல்வராக பதவியேற்றேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து நாட்டின் பிரதமராவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.

பொது வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர்மோடிக்கு பாஜக தலைவர்கள்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறும்போது, ‘‘நாட்டை வலிமையானதாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அவர்அமல்படுத்திய விதம் தனித்துவமானது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டசிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக்தடை சட்டம், ராமர் கோயில், சிஏஏதிருத்த சட்டம், ஓபிசி.க்கு அரசியலமைப்பு அந்தஸ்து, ஜிஎஸ்டி அமலாக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு போன்று கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிரதமர் மோடி தீர்வு கண்டுள்ளார். தீவிரவாத ஒழிப்பு போன்ற பிரச்சினைகளில் உலக அரங்கில் இந்தியாவை மையமான இடத்துக்கு கொண்டு சென்றவர் மோடி’’ என்று புகழாரம் சூட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, ‘‘நாட்டில் சிறந்த நிர்வாகம், வளர்ச்சியை தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காவும் இரவு பகலாக உழைத்து வருபவர் பிரதமர் மோடி’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x