Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த ஆண்டு, கரோனா பரவலால் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் வரை நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி, நேற்று மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஊர்வலமாக 4 மாட வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் அக்கொடியை வேத பண்டிதர்கள் வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. வரும் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை, கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஏகாந்தமாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்த ஆண்டு 4 மாட வீதிகளில் வாகன சேவை கிடையாது. இதற்கு பதில், கோயிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் காலை 9 மணியிலிருந்து 10 மணி வரையிலும், இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும் வாகன சேவை நடத்தப்படும். இதில் கருட சேவை மட்டும் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. இம்முறை தங்க தேரோட்டமும், தேர்த்திருவிழாவும் இல்லை என்பதால், அதற்கு பதில், சர்வ பூபால வாகன சேவை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 முதல் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 11-ம் தேதி முதல் அலிபிரி மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளதால், இரவு 12 மணி வரை அதில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால், திருமலைக்கு செல்ல கண்டிப்பாக தரிசன டிக்கெட் இருத்தல் அவசியம் என்றும், மேலும் தரிசனத்திற்கு வருவோர் 2 கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் (தரிசனத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் பெறப்பட்டது) கொண்டு வருவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரிய சேஷ வாகனம்

பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்ததை தொடர்ந்து, நேற்றிரவு, தேவி, பூதேவி சமேதமாய் உற்சவர் மலையப்பர், ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். திருக்கல்யாண மண்டபத்தில் 1 மணி நேரம் வரை சிறப்பு பூஜைகள், ஆரத்திகள் வழங்கி வழிபாடுகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x