

கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘கிராமங்களில் உள்ள ஏழைப் பெண் கள் உணவு சமைக்கும்போது புகை யில் வாடுகின்றனர். சமைக்கும் போது ஏற்படும் புகையானது ஒரு மணிநேரத்தில் 400 சிகரெட் புகைப் பதற்கு சமமாக உள்ளது நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு தீர்வு காண கிராமங்களில் உள்ள ஏழைப் பெண் களுக்கு இலவசமாக காஸ் இணைப்பு வழங்கப்படும். இத் திட்டம் ரூ.8000 கோடியில் செயல் படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச் சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா (இலவச காஸ் இணைப்பு வழங்கும்) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்குள் போர்க்கால அடிப்படையில் அமல்படுத்தப் படும். பெண்களின் பெயர்களில் காஸ் இணைப்புகள் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.50 கோடி ஏழைப் பெண்கள் இந்த ஆண்டு பயன்பெறுவார்கள்.
மொத்தம் 5 கோடி பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது. இவ்வாறு பிரதான் கூறினார்.