

லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்காமல், பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையேமோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
ந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உ.பி. அரசு நியமித்துள்ளது.
கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளில் 3 பேரின் குடும்பத்தாரைச் சந்தித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்சித் சன்னி ஆகியோர் ஆறுதல் தெரிவி்த்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை இன்றும் நேரடியாகச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது லக்னோவில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பதைவிட, பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
விசாரணை ஆணையம் தனது பணிகளை இதுவரை தொடங்காத நிலையில் அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
விவசாயிகள் குடும்பத்தினர் இழப்பீடு ஏதும் கோரவில்லை, அவர்கள் நீதியை மட்டுமே கோருகிறார்கள். ஜனநாயகத்தில் நீதி கோருவது ஒருவரின் உரிமை. பாரபட்சமற்ற விசாரணை நடக்க வேண்டுமென்றால், மத்திய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் அவரின் மகனும் கைது செய்யப்பட வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் விசாரணை வருமபோது பாரபட்சமாகவே நடக்க வாய்ப்புள்ளது. கலவரம் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
உயிரழந்த விவசாயிகள் உடலை உடற்கூறு ஆய்வு செய்து, குடும்பத்தினரிடம் அளித்த அறிக்கை புரிந்து கொள்ள முடியாத வகையில் தெளிவற்றதாக இருக்கிறது. மத்தியஅமைச்சர் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்படும்வரை, அவரின் மகன் கைது செய்யப்படும்வரை என்னுடைய போராட்டம் தொடரும் இதை விவசாயிகள் குடும்பத்தாரிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.