

மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் 85 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 22 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 144 பஞ்சாயத்து சமிதி வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களைக் கைப்பற்றியுள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து துலே, நந்துர்பார், அகோலா, வாசிம், நாக்பூர், பால்கர் மற்றும் பஞ்சாயத்து வார்டுகளில் ஓபிசி இடங்களைப் பொதுப் பிரிவினருக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காலியாக இருந்த 6 மாவட்டப் பஞ்சாயத்துகளில் உள்ள 85 வார்டுகள், 144 பஞ்சாயத்து சமிதிகள் வார்டில் தேர்தல் நடத்தப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 6 மாவட்டப் பஞ்சாயத்துகளில் உள்ள 85 வார்டு காலியிடங்கள், 37 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 144 வார்டு காலியிடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஒரு மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் 3 பஞ்சாயத்து சமிதி வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
6 மாவட்டப் பஞ்சாயத்துகளில் உள்ள 85 இடங்களில் அதிகபட்சமாக 22 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கூட்டணி சேர்ந்த மகாவிகாஸ் அகாதி 46 இடங்களையும் வென்றது.
இதில் காங்கிரஸ் 19 இடங்களிலும், என்சிபி 15 , சிவசேனா 12 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் வென்றன.
பஞ்சாயத்து சமிதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 144 இடங்களில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் வென்றது. பாஜக 33 இடங்களிலும், சிவசேனா கட்சி 23 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 18 இடங்களிலும் வென்றன. சுயேச்சை வேட்பாளர்கள் 7 இடங்களிலும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா ஒரு இடத்திலும், மற்ற கட்சிகள் 26 பஞ்சாயத்து சமிதிகளிலும் வென்றன.
144 பஞ்சாயத்து சமிதி வார்டு தேர்தலில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி 73 இடங்களைக் கைப்பற்றியது. மாவட்டப் பஞ்சாயத்து தேர்தலில் 367 வேட்பாளர்களும், பஞ்சாயத்து வார்டு தேர்தலில் 555 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அசோக் சவான் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மராத்திய மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்ததற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பாஜக, ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, மராத்திய மக்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் சரியான முடிவை எடுக்கவில்லை.
46 மாவட்டப் பஞ்சாயத்துகளில் மகாவிகாஸ் அகாதி தற்போது 46 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 37 இடங்களில் இருந்தோம். பாஜக இதற்கு முன் 31 இடங்களில் இருந்தது. தற்போது 22 ஆகக் குறைந்துவிட்டது. வான்சித் பகுஜன் அகாதி 12 இடங்களில் இருந்து 8 ஆகச் சரிந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.