Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

இந்தியாவில் 7 இடங்களில் ரூ.4,445 கோடியில் ஜவுளி பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

வேலை வாய்ப்பை அளிக்கும் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4,445 கோடி முதலீட்டில் 7 மெகா ஜவுளிப் பூங்காக் களை அமைக்க பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ‘பி.எம்.மித்ரா’ திட்டத்தின்கீழ் 7 மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்திய ஜவுளித் தொழிலை சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன் அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஏற்றுமதியை அதிகரித்து, அந்நியச் செலா வணியை ஈட்டுவது, சர்வதேச தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்து, அதன்மூலம் வெளிநாட்டு சந்தையில் போட்டியிடும் வகையில் இந்திய தயாரிப்பு களை உருவாக்குவது போன்ற அம்சங்கள் இத்திட்டத்தின் நோக்கங்களாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘பிஎம் மித்ரா’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:

நாட்டின் 7 இடங்களில் ‘பிஎம் மித்ரா’ திட்டத்தின்கீழ் மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடி செலவிடப்படும். தனியார் முதலீடுகளும் அனுமதிக்கப்படும். இதன்மூலம் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி ஏற்படும். மேலும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த ஜவுளிப் பூங்காக்கள், அந்நிய முதலீடு களை பெருமளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி மூலம் 4,400 கோடி டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்தார்.

ரயில்வே ஊழியருக்கு 78 நாள் ஊதியம் போனஸ்

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, 72 நாள் ஊதியத்தை போனஸாக அளிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமரும் அமைச்சரவைக் குழுவினரும் 78 நாள் ஊதியத்தை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

இத்தகவலை செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.1,985 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x