

கேரள மாநிலம் சபரிமலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கேரள சட்டப்பேரவையில் தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
சபரிமலை யாத்திரைக்கான அனைத்து அடிப்படை வசதி களும் ஐயப்பன் கோயில் மற்றும் அதன் வளாகத்தில் தயாராக உள்ளன. கரோனா பரவல் இல்லாத, பாதுகாப்பான தரிசனத்தை பக்தர்களுக்கு உறுதிசெய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பம்பை மற்றும் எருமேலியில் மருத்துவ வசதிகள், ஆர்டி-பிசிஆர் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தோ, தரிசனத் துக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது என்பது குறித்தோ அரசு இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. கோயில் வளாகம், யாத்திரையுடன் தொடர்புடைய இடங்களில் அடிப்படை வசதி கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.