

நாட்டின் பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம் வியாபாரிகள் பொருட்களை பதுக்குவதே என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் சாடலைத் தொடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறுகையில், “பணவீக்கத்துக்கு பதுக்கல்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியும், மத்திய அரசும் தங்களால் சிறப்பாக செயல்பட முடியாத நிலைக்கு வெளியில் காரணங்களைத் தேடத் தொடங்கியுள்ளன. அவர்களால் மக்களின் விருப்பத்தையும், தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. தேர்தலின்போது முன்வைத்த “நல்ல காலம் இனிமேல் பிறக்கும்” என்ற முழக்கத்தை பாஜக அரசால் செயல்படுத்த முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பதுக்கல், மாநில அரசுகளின் நிர்வாகத் திறமையற்ற நிலை, சர்வதேச அளவிலான மாற்றங்கள் ஆகியவைதான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று கூறி வந்தோம். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று கூறி வந்தது. இப்போதும் பாஜக அதே கருத்தைத்தான் கொண்டுள்ளதா? அப்படியெனில், இப்போது விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசில் ஊழல் நடைபெறுகிறதா?
காங்கிரஸ் ஆட்சியை விட்டு வெளியேறிய போது மிகவும் மோசமான பொருளாதார நிலை இருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை விட, காங்கிரஸ் ஆட்சியின் இறுதியில் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாகத்தான் இருந்தது” என்றார்.