

மத்தியப்பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.7 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் மோடி இன்று வழங்கினார்.
பஞ்சாயத்ராஜ் அமைச்சகத்தின் கீழ் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது.
நகர்ப்புறங்களில் உள்ளது போல கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும் இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலச்சொத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு மறுவரையறை செய்வதையும் இது நோக்கமாக கொண்டது.
நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இந்த திட்டம் ஊக்கப்படுத்துகிறது.
மத்தியப்பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின்கீழ் 1,71,300 பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் வழங்கினார். இந்த நிகழ்வில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.