Published : 06 Oct 2021 02:31 PM
Last Updated : 06 Oct 2021 02:31 PM

முதுகலை நீட் எஸ்எஸ் தேர்வில் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

முதுகலை நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வுக்கான (நீட்-எஸ்எஸ்) அறிவிக்கை கடந்த ஜூலை 23-ம் தேதி வெளியிடப்பட்டு நீட் தேர்வுகள் நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவிக்கைக்கு முன் திடீரென பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் திருத்தங்களுக்கு முதுநிலை மருத்துவம் பயிலும் 41 மாணவர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அமர்வில் விசாரித்து வருகிறது. ஜூலை மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் நேரத்தில் தேசிய மருத்துவ ஆணையமும், தேசிய தேர்வு வாரியமும் செய்த திருத்தங்களையும், அந்தத் திருத்தங்கள் நியாயமானதுதான் என்ற மத்திய அரசின் வாதத்தையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. மத்திய அரசு நன்கு கலந்தாய்வு செய்து முடிவை அறிவிக்க நீதிபதிகள் அமர்வு நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியா நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், “ஏற்கெனவே இருக்கும் முறையில் முதுகலை நீடி-எஸ்எஸ் தேர்வுகள் நடக்கும். மாணவர்களின் நலன் கருதி இந்தத் திருத்தங்கள் அனைத்தும் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு வாரியம் ஆகியவற்றுடன் கலந்தாய்வு செய்து, இந்த முடிவை அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசை நீதிபதிகள் அமர்வு கடுமையாக விமர்சித்தது. “ஓராண்டு தள்ளிவைத்து இந்தத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதால் வானம் இடிந்து விழாது. கடைசி நேரத்தில் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காகவா?

இந்த தேசத்தின் சோகம் மருத்துவத் தொழிலும், மருத்துவக் கல்வியும் வியாபாரமாகிவிட்டது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதும் வியாபாரமாகிவிட்டது என்ற வலுவான கருத்து எங்களுக்கு இருக்கிறது” எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x