

பாஜகவில் நீண்ட காலம் இருந்தவர், திரிபுராவின் சுர்மா தொகுதி எம்எல்ஏவான ஆஷிஸ் தாஸ் பாஜகவிலிருந்து நேற்று விலகினார்.
தனது தலையை மழித்துக் கொண்ட தாஸ், திரிபுராவில் பாஜகவின் தவறுகளுக்காக இதைச் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
திரிபுராவின் சுர்மா தொகுதி எம்எல்ஏ ஆஷிஸ் தாஸ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘‘திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அரசியல் ஏதாச்சதிகாரமும், குழப்பமும்தான் நிலவுகிறது. பாஜகவின் ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். அதனால்தான் நான் பாஜகவிலிருந்து விலக முடிவு செய்தேன்.
தேசத்தின் அடுத்த பிரதமராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சரியான தேர்வாக இருப்பார். கடந்த 2 ஆண்டுகளாக திரிபுரா முதல்வர் பிப்லப் தேவுக்கு கடுமையான விமர்சனங்கள் அளித்தார்.
திரிபுராவில் பாஜகவின் தவறான ஆட்சிக்காகவும், நான் அந்தக் கட்சியில் இருந்ததற்காகவும் நான் என் தலைமுடியை மழித்துக் கொண்டேன். நான் பாஜகவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்வேன்.
கடந்த 2 ஆண்டுகளாக பாஜக அரசு மாநிலத்தில் செய்த தவறான நிர்வாகம், ஏதேச்சதிகாரப் போக்குதான் நான் விலகக் காரணமாக இருந்தது. பல தவறுகளை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டினேன். கட்சி, அரசியலைத் தாண்டி நான் எப்போதும் மக்களுக்காக உழைக்கிறேன்.
பிரதமர் மோடி தேசத்தின் பெரும்பாலான அரசின் சொத்துகளைத் தனியாருக்கு விற்று வருகிறார். ஒரு காலத்தில் மோடியின் பேச்சுகள் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருந்தன. ஆனால், இப்போது அவரின் பேச்சு வெற்று வார்த்தைகளாகிவிட்டன’’.
இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.
பாஜகவிலிருந்து முறைப்படி விலகாமல் இருக்கும் ஆஷிஸ் தாஸ் மீது பாஜக தலைமை விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 2023-ம் ஆண்டு திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்குள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தாஸ் சேரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.