

சொகுசுக் கப்பலில் போதை விருந்து வழக்கில் மேலும் 3 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரித்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, மும்பைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் வியாழக்கிழமை வரை 3 நாள் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே சொகுசுக் கப்பல் நேற்று முன்தினம் மும்பை திரும்பிய பிறகு போதை விருந்து வழக்கில், போதைப் பொருள் விற்பனையாளர் இருவர், பயணி ஒருவர் என 3 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே நேற்று கூறும்போது, “பல்வேறு ஆதாரங்களை நாங்கள் ஆராய்ந்த பிறகு மும்பையின் மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த ஷ்ரேயாஸ் நாயர் என்ற போதைப் பொருள் விற்பனையாளரை கைதுசெய்தோம்.
இதுபோல் மும்பை ஜோகேஸ் வரி பகுதியைச் சேர்ந்த மற்றொருபோதைப் பொருள் விற்பனையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரும்பாலும் கிரிப்டோ கரென்சி மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்” என்றார். - பிடிஐ