Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM

கர்நாடகாவில் அசுத்தமான நீரை குடித்ததில் 6 பேர் உயிரிழப்பு; 200 பேருக்கு சிகிச்சை

கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹூவின ஹகடஹளி அருகே மகரப்பி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள‌ ஆழ்துளைக் கிணற்று நீரில் கனிமத் துகள்கள் கலந்து மாசடைந்துள்ளதாக கிராமத்தினர் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர். இருப்பினும், துங்கப்பத்ரா அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படாததால், அந்த கிராமத்தினர் மாசடைந்த ஆழ்துளை நீரையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, நேற்று அசுத்தமான ஆழ்துளை நீரை குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு சிலருக்கு தலை சுற்றலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட லட்சுமம்மா (60), பசம்மா (67), நீலப்பா (62), கோனேப்பா (67), மகாதேவப்பா (56),கெஞ்சம்மா (52) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட300-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, விஜ‌யநகர் மாவட்டம் ஆழ்துளைக் கிணற்றின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திய 3 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. டேங்கர் லாரிகள் மூலம் மகரப்பி கிராமத்தில் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ''அசுத்தமாக நீர் குடித்து 6 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனீஷ் மவுட்கில் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x