ஹேப்பி குட்ஃபிரைடே: அமைச்சர்களின் ட்வீட்டும் விமர்சனமும்

ஹேப்பி குட்ஃபிரைடே: அமைச்சர்களின் ட்வீட்டும் விமர்சனமும்
Updated on
2 min read

புனித வெள்ளியை ஒட்டி பாஜக அமைச்சர்கள் சிலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ஹேப்பி குட் ஃபிரைடே வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளியை அனுசரித்தனர்.

ஆனால், புனித வெள்ளியின் நோக்கத்தை அறியாமல் பாஜக மத்திய அமைச்சர்கள் சிலர் 'ஹேப்பி குட் ஃபிரைடே' என வாழ்த்து சொல்லி ட்வீட்களை பதிவு செய்திருந்தனர்.

வாழ்த்து ட்வீட்டை முதலில் பதிவு செய்திருந்தவர் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. காலை 7.19 மணிக்கு அவர் ட்வீட் செய்திருந்தார், அதில் "நண்பர்கள் அனைவருக்கும் ஹேப்பி குட்ஃபிரைடே" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்ததாக கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, "ஹேப்பி குட்ஃபிரைடே. எல்லா நலமும், வளமும் கிடைக்கட்டும்" என வாழ்த்தியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "அனைவருக்கும் குட்ஃபிரைடே தின வாழ்த்துகள். இறைவன் அருள் பெறுக" என வாழ்த்தியிருந்தார்.

நஜ்மார் ஹெப்துல்லாவும், "குட்ஃபிரைடே நாளில் மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் ஆசி உண்டாகுக" என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சரியாக ட்வீட் செய்த பிரதமர்:

பாஜக அமைச்சர்கள் பலர் தவறாக ட்வீட் செய்துவிட்ட அதை பின்னர் டெலீட் செய்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "புனித வெள்ளி, பிரார்த்தனை செய்வதற்கான நாள் மற்றும் மேன்மை, பக்தி, கருணை நிறைந்த யேசு கிறிஸ்துவின் சிந்தனைகளை நினைவுகூரும் நாள். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களை நினைவு கூரும் தினமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது" என மிகத் தெளிவாக பதிவு செய்திருந்தார்.

மோடிக்கு நன்றி சொன்ன பாதிரியார்:

ட்விட்டரில் பாஜகவினர் சிலர் குட் ஃபிரைடே வாழ்த்து செய்தி பதிந்தது குறித்து கத்தோலிக்க பாதிரியார் பால் தெலாகட் கூறும்போது, "இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தில் யாரும் வாழ்த்துகள் பறிமாறிக் கொள்வதில்லை. இது குறித்து மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

அதேவேளையில் பொதுவாக இதுபோன்ற கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் மவுனத்தை கடைபிடிக்கும் பிரதமர் இம்முறை தனது உணர்வை பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ட்வீட்டை சீரமைத்த ரயில்வே அமைச்சர்:

பிரதமர் மோடியின் விளக்கமான ட்வீட்டை பார்த்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது ட்வீட்டை டெலீட் செய்தார். பின்னர் புனித வெள்ளியின் சரியான புரிதலோடு ட்வீட் செய்தார்.

சுதாரித்துக் கொண்ட ராகுல்:

அமைச்சர்கள் சிலர் தவறாக ட்வீட் செய்து விமர்சனத்துக்குள்ளான நிலையில் ராகுல் காந்தி அலுவலகத்திலிருந்து @OfficeOfRg என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியானது. அதில், "பிரார்த்தனைக்கான இன்றைய நாளில், அன்பு, பரிவு மற்றும் தியாக சிந்தனைகள் நமது எண்ணங்களையும், செயல்களையும் வழிநடத்தட்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in