நாடாளுமன்றத் துளிகள்: நிரம்பி வழியும் சிறைகள்

நாடாளுமன்றத் துளிகள்:  நிரம்பி வழியும் சிறைகள்
Updated on
2 min read

நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள், அமைச்சர்கள் அளித்த பதில்கள் உள்ளிட்டவற்றின் சுருக்கம்:

கிங் பிஷரின் நிலுவை - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு:

இந்திய விமான ஆணையத்துக்கு தனியார் விமான நிறுவனங்கள் ரூ.710.14 கோடி கட்டண நிலுவை வைத்துள்ளன. இன்டிகோ (ரூ.71.81 கோடி), ஜெட் ஏர்வேஸ் (ரூ41.16 கோடி), ஸ்பைஸ் ஜெட் (ரூ63.28 கோடி) நிலுவை வைத்துள்ளன. மூடப்பட்ட கிங்பிஷர் நிறுவனம் ரூ.294.57 கோடி நிலுவை வைத்துள்ளது. இதுதொடர்பாக மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

12 உளவாளிகள் கைது - உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரை தேசத்துக்கு எதிராக உளவு பார்த்ததற்காக 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2013-ல் 5 பேரும், 2015-ல் 3 பேரும், 2016-ல் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தேச விரோதச் செயல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டி.பி, சர்க்கரை நோய் - சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா:

1990-ம் ஆண்டை ஒப்பிடும்போது, காசநோய் (டிபி) பாதிப்பு மற்றும் தொற்று விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 216 (பாதிப்பு) மற்றும் 465 (தொற்று விகிதம்) என்ற நிலையில் இருந்து 2014-ம் ஆண்டில் முறையே 167 மற்றும் 195 என குறைந்திருக்கிறது. அதேசமயம், சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி, இந்தியாவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 20-79 வயதுக்கு உட்பட்டோரில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2013-ல் 6.5 கோடியாகவும், 2014-ல் 6.68 கோடியாகவும், 2105-ல் 6.91 கோடியாகவும் உள்ளது.

நக்ஸல் தீவிரவாதம் - மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

நக்ஸல் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட மத்திய அரசு திட்ட ரீதியாக செயல்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக நக்ஸல் வன்முறைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அரசின் உத்திகளுக்கு பயன் கிடைத்துள்ளது. 2010-ல் 1,005 ஆக இருந்த நக்ஸல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 226 ஆக குறைந்துள்ளது.

நிரம்பி வழியும் சிறைகள் - உள் துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

இந்திய சிறைகளின் கொள்திறன் 3 லட்சத்து 56 ஆயிரத்து 561 பேர். ஆனால், 2014-ம் ஆண்டு டிசம்பர் கணக்குப்படி இச்சிறைகளில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 536 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை நிர்வாகம் மாநில அரசின் பொறுப்புக்கு உட்பட்டது. இருப்பினும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு 2002- 2009-ம் ஆண்டு கால கட்டத்தில் உதவி செய்தது. அசாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், சிக்கிம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களால் பல்வேறு காரணங்களால் மத்திய அரசின் நிதியுதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in