

அனைத்திந்திய மஜ்லீஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர எம்.எல்.ஏ. வாரிஸ் பத்தான் ‘பாரத் மாதா கி ஜெய்’ கூற மறுத்ததற்காக மகாராஷ்டிர சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டபேரவையில் வாரிஸ் பத்தான், தன் உயிரே போனாலும் பாரத மாதாவை புகழ்ந்து பேச மாட்டேன் என்று கூறியதையடுத்து இந்திய தேசத்துக்கு அவமரியாதை செய்து விட்டதாக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவையில் பத்தான் இதனை தெரிவித்த போது அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் நாட்டை அவமதித்து விட்டார் என்று கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட சட்டபேரவை 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் ஹரிபாபு பாக்தே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தன் அறைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பை அடுத்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ரஞ்சித் படேல் வாரிஸ் பத்தான் மீது கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி நாட்டிற்கு அவமரியாதை இழைத்து விட்டார் என்று குற்றம்சாட்டி இடைநீக்கம் செய்வதான தீர்மானத்தை அறிவித்தார். பட்ஜெட் அமர்வு வரை அவர் சட்டப்பேரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் காத்சே கூறும்போது, “இந்த நாட்டில் வாழும் அனைவரும் நம் நாட்டை நேசிக்க வேண்டும். நாம் இனம், மதம், மொழி, சாதி வேறுபாடின்றி பாடுபட்டு சுதந்திரம் பெற்றுள்ளோம். ஜே.என்.யூ. நிகழ்வுகளுக்கு முன்பாக தேச விரோதம் என்ற விஷம் வரம்புக்குட்பட்டதாக இருந்தது. ஆனால் இது தற்போது சட்டப்பேரவையிலும் பரவிவிட்டது. யாராவது இனி இப்படி பேசினால் இது தேசத் துரோகமாகவே கருதப்பட வேண்டும்” என்றார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பாரத் மாதா கி ஜெய் விஷயத்தை எடுத்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது என்றும் அவர் அதைக்கூறப்போய்தான் ஓவைஸி அதனை வைத்து அரசியல் செய்ய தற்போது மோசமான அரசியல் இதனை வைத்து தலைதூக்கியுள்ளது என்று சாடியது.