

விலங்குகளைத் துன்புறுத்தினால் கடும் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும், இதற்கான வரைவு மசோதா அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலக விலங்குகள் தினத்தையொட்டி, டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள காமதேனு கோசாலையில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய கால்நடைப் பராமரிப்பு , மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியின் இடையே மத்திய அமைச்சர் ரூபாபாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு முதல்முறையாக தவறு செய்தால்கூட கடும் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளோம். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கூட்டத்தொடரில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்
தற்போதுள்ள சட்டத்தின்படி, விலங்குகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுத்தி, துன்புறத்தி முதல்முறையாக சிக்கினால், ரூ.50 மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. இதைத் திருத்தி மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் ஓ.பி. சவுத்ரி நிகழ்ச்சியில் பேசியதாவது:
“விலங்குகளை துன்புறுத்தி முதல்முறையாக சிக்குவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த ஆலோசித்து வருகிறோம், அதுமட்டுமல்லாமல் முதலமுறையாக தவறு செய்தாலே சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் செய்யவிருக்கிறோம்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கூட்டத்தொடரில் வரைவு மசோதா தாக்கலாகும். விலங்குகளை திரைப்படங்களுக்கு பயன்படுத்த அனுமதி பெற தனியாக போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பசுக்களை வளர்க்க முடியாத சூழல் இருக்கிறது. ஆனால், பசுக்களை வளர்க்க விருப்பம் இருப்போருக்கு தனியாக பசு விடுதி (கவ் ஹாஸ்டல்) தொடங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பசுக்களை வாங்கி இங்கு பராமரித்து வளர்க்கலாம். இதற்குதேவையான உதவிகளை அரசு வழங்கும்.
சமீபகாலமாக கோசாலைகளுக்கு வரும் நிதியுதவி குறைந்துள்ளது. இதை அதிகப்படுத்த தேவையான விழிப்புணர்வும், ஊக்கமும் மக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரே வழி, பசு வளர்ப்புதான். ஆதலால், தீபாவளி, தசரா போன்ற பண்டிகை நாட்களில் பசு தொடர்பான பால் பொருட்களில் செய்த உணவுகளை அதிகமாக வாங்கியும், ஆதரவு கொடுத்தும் விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும்.
இவ்வாறு சவுத்ரி தெரிவித்தார்.