

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடைபெற உள்ளது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளை பின்பற்றி, இம்முறை வாகன சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஆனால், ஆகம விதிமுறைகளை பின்பற்றி, 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை கோயிலுக் குள் விமரிசையாக நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வரும் வேளையில், வைகானச ஆகம விதிகளின்படி இன்று ஏழுமலையான் கோயிலைவாசன திரவியத்தால் சுத்தப் படுத்தப்படும் ‘ஆழ்வார் திரு மஞ்சன சேவை’ நடைபெற உள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மதியம் வரை இந்த ‘பரிமள’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதனால், இன்று காலை விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு பின்னரே சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம் மோற்சவ விழா தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் விதமாக, திருமலைக்கு வரும் பக்தர்கள் 2 கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றி தழை கட்டாயம் கொண்டு வர வேண்டுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
1000 பக்தர்களுக்கு இலவச தரிசனம்
பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களிலும் தினமும் 1,000 பக்தர்கள் வீதம் 9,000 பக்தர்கள் இலவச சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்படும்.
மலைவாழ் மக்கள் மற்றும் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. பின்தங்கிய பகுதிகளில் மதமாற்றத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ரூ. 25 கோடி செலவில் ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 502 கோயில்களை தேவஸ்தானம் இலவசமாக கட்டிக்கொடுத்தது. இங்கு தினசரி பூஜை செலவையும் தேவஸ்தானம் ஏற்றுள்ளது.