

நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவச மாக வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு முகாம்களும் அடிக்கடி நடத்தப்பட்டன. இதனால் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்ட பதிவில், ‘‘வலிமையான நாடு - விரைந்து தடுப்பூசி: நாடு முழுவதும் பெரியவர்கள் 70 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது மேலும் தொடரட்டும், நாம் கரோனாவை எதிர்த்து போரிட்டு வெல்வோம்’’ என்று கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்து 46,176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து 90.79 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 25 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. - பிடிஐ