

பழங்குடியினர் நலன்களுக்காக போராடி வரும் சோனி சோரி, ஜே.என்.யூ. மாணவர்களுக்கு தன் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்ட சோனி சோரி அங்கு மாணவர்களை ஆதரித்துப் பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் பகுதியான தாண்டேவாடாவில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் முகத்தில் ஆசிட் வீசி தாக்கப்பட்டார். இதில் அவரது முகம் சிதைந்தது.
இந்நிலையில் ஜே.என்.யூ.வில் அவர் பேசியதாவது: “என்னுடைய முகம், பஸ்தாரில் நடக்கும் சண்டையை பிரதிநிதித்துவம் செய்யும் முகம். நக்சல்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளினார்கள். அதே முறையில்தான் தற்போது கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது குறிவைக்கப்படுகிறது.
உங்களில் ஒருவராக நான் இங்கு நிற்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவது குறித்து எனக்கு மகிழ்ச்சி. சத்திஸ்கர் பகுதியில் பழங்குடியினர் நடத்தும் போராட்டத்திற்கும் உங்களது போராட்டத்திற்கும் அதிக வித்தியாசமில்லை.
அரசிடமிருந்து பழங்குடி இன மக்கள் கருணையை எதிர்பார்க்கின்றனர். அரசு எங்களைக் குறிவைக்கிறது. எங்கள் வீட்டில் நாங்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை. ஏனெனில் துணை ராணுவப்படையினர் எப்போது வந்து விசாரணை என்று அழைத்துச் சென்று நக்சலைட் என்று புகார் பதிவு செய்வார்களோ என்ற அச்சம் எங்களிடையே இருந்து வருகிறது.
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். என் போராட்டமெல்லாம் வாழ்க்கையின் அனுபவங்கள். என்னை சிறையில் அடைத்தார்கள், நான் சித்ரவதை செய்யப்பட்டேன். சமீபத்தில் போலி என்கவுண்டர் ஒன்றை அம்பலப்படுத்தியதற்காக என் மீது அமிலம் வீசினர். அவர்கள் அமில வீச்சோடு நிற்கவில்லை, இன்னமும் என்னை அச்சுறுத்துகின்றனர், என் குடும்பத்தின் இளம் பெண்களை அச்சுறுத்துகின்றனர். அதாவது அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் உடல் ஊனம் ஏற்படுத்துவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே அரசு என்பது இப்படித்தான், நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்.”
இவ்வாறு பேசினார் சோனி சோரி.