

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது. பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன.
சூப்பர் ரிச் எனச் சொல்லப்படும் உலக அளவிலான மற்றும் இந்திய அளவிலான பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சட்டவிரோதச் சொத்துகளின் நிதி விவகாரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘‘பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்வோம். இதுபற்றி விசாரணை நடைபெறும். அதன் பிறகே இதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும்’’ எனக் கூறினார்.