

பிரிட்டனில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த 700 பயணிகள் 10 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகக் கூறி இந்தியர்கள் நுழைவதற்கு கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனை அடுத்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து இந்தியா ஏற்கெனவே அந்நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான இ-விசா வசதியைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் அவர்கள் இந்தியா வருவதற்கு வழக்கமான முத்திரை விசாவிற்கு (Stamp Visa) விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதவிர தற்போது புதிய நடைமுறைகளையும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதன்படி, பிரிட்டன் குடிமக்களுக்கான 'பரஸ்பர நடவடிக்கைகளின்' கீழ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்திய அரசின் புதிய விசா நிபந்தனைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துள்ள 700 பயணிகளும் 10 நாள் கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இந்தியா வந்துள்ள பயணிகளுக்கு, குறிப்பாக பிரிட்டன் குடிமக்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
''ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை இங்கிலாந்தில் இருந்து மொத்தம் மூன்று விமானங்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. அதில் பிரிட்டன் குடிமக்கள் உட்பட சுமார் 700 பயணிகள் பயணம் செய்தனர்.
புதிய விதிகளின்படி, அனைத்துப் பயணிகளும் கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு அவர்களது வீட்டிலோ அல்லது அவர்கள் செல்லும் இடத்திலோ 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தச் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி அரசாங்கத்தின் குழு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு டெல்லிக்கு வரும் பயணிகள் செல்லும் டெல்லி முகவரியைப் பெறுவது, மருத்துவர்கள் அவர்களைப் பரிசோதனை செய்வது போன்ற நடைமுறைகளை மேற்கொள்கின்றன. அதன் பிறகு செல்ல அனுமதிக்கப்படும் நபர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பின்பற்றுகிறாரா, இல்லையா என்பதை மற்றொரு குழு சரிபார்க்கும்.
மேற்கண்ட நடைமுறைகள் தவிர, புதிய விதிகளின்படி, பிரிட்டன் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிட்டன் செல்லும் பயணிகள் ஏற்கெனவே அவர்கள் தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டிருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே இந்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பிரிட்டன் சென்றவுடன் கோவிட் -19 சோதனையும், பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அங்குள்ள விதிகளாக உள்ளன''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.